Saturday, August 20, 2011

பிடியுங்கள் திமுக-வினரை- ஒரு ’ஜெ’யின் சபதம்




நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.


நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழகம் முழுக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், நில அபகரிப்புப் புகார் சிறப்புக் காவல் பிரிவும் தொடங்க உத்தரவு இட்டு இருக்கிறார்.

''உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரும் உள்ளே இருக்கணும்'' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. அதை சட்டரீதியாகத் தடுக்க முடியுமா என்று தி.மு.க-வும் சிலுப்பிக் கொண்டு தயாராகி வருகிறது!


தமிழ்நாடு முழுக்க நில அபகரிப்பு தொடர்பாக இதுவரை வந்த புகார்கள் 2,800-ஐத் தாண்டிவிட்டன. பெரும்பாலும் தி.மு.க. தொடர்புடையவர்கள் மீதுதான் குற்றச்சாட்டு. கடந்த மூன்று மாதங்களில் கைதான தி.மு.க. வி.ஐ.பி-கள் பற்றிய ஓர் அலசல் இது. போலீஸ் போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டன!

ஜெயலலிதா கோபமும்... வீரபாண்டியார் கைதும்... 

சேலத்தில் உள்ள பிரீமியர் ரோலர் ஃபிளவர் மில்லை மிரட்டி வாங்கியதாக அதன் உரிமையாளர் கொடுத்த புகாரில்தான், வீரபாண்டி ஆறுமுகம் மீது கொலை மிரட்டல், நிலத்தை அபகரித்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்தியக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் அவரைக் கஸ்டடியில் வைத்து விசாரித்தது போலீஸ். 

அந்த சமயத்தில் வெளியில் இருந்த தி.மு.க-வினர் சிலர் பச்சை சேலை உடுத்திய ஒருவரை அசிங்கப்படுத்துவதைப்போன்று சில சம்பவங்களை அரங்கேற்றவே, கடுப்பானார் ஜெயலலிதா. தாசநாயக்கன்பட்டி பால மோகன்ராஜ் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆறுமுகம். இன்னும் ஜாமீன் வாங்கவும் முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்.


 ஆப்பு வைத்த அரவை மில் அதிபர்! 

பெருந்துறையைச் சேர்ந்த கடலை அரவை மில் அதிபர் ராமசாமி, ஈரோட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்திடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 'அந்தக் கடனுக்காக, ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது மில்லை என்.கே.கே.பி.ராஜாவுக்குக் கொடுக்க வேண்டும் என ஈரோடு மேயரான குமார் முருகேஷ் மிரட்டினார். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, அந்த அரவை மில்லை அபகரித்துக்கொண்டார்கள்!’ என்பதுதான் ராமசாமியின் புகார். 

தி.மு.க. ஆட்சியில் பயந்துகொண்டு இருந்த ராமசாமி, ஆட்சி மாறியதும் போலீஸில் புகார் கொடுக்க... கொலை மிரட்டல், நில அபகரிப்பு உட்படப் பல பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜாவையும், மேயர் குமார் முருகேஷையும் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்தது ஈரோடு போலீஸ்.

கொலை மிரட்டல்.. ஆக்கிரமிப்பு.. மோசடி! 

சென்னை, நொளம்பூரில் அண்ணாமலை அவென்யூ என்ற 20 ஏக்கர் நிலத்தில் 120 குடும்பங்கள் வசித்து வந்தன. கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான ரங்கநாதன், அவர்களை மிரட்டிக் காலி செய்யவைத்தார் என்பதுதான் புகார். பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடி ரங்கநாதன் மீது புகார் கொடுக்க, விடுமா போலீஸ்? கொலை மிரட்டல், ஆக்கிரமிப்பு, மோசடி செய்தல் என 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ரங்கநாதனைத் தூக்கிவிட்டது. ரங்கநாதன் மீது ஏற்கெனவே நிலுவையில் இருந்த அத்தனை புகார்களும் தூசு தட்டப்படுகின்றன. இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் ரங்கநாதன்.


 
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 'பொட்டு’ சுரேஷ்! 

மதுரை மாவட்டத்தில் உள்ள வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பாப்பா என்ற பெண்தான் பொட்டு சுரேஷ§க்கு முதல் கொட்டு வைத்தவர். 'எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 5.14 ஏக்கர் நிலத்தை, வெறும் 40 லட்சத்துக்கு பொட்டு சுரேஷ§ம், மதுரை மாநகர தி.மு.க. செயலாளர் தளபதியும் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க!’ என்று புகார் கொடுத்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பட்டது. 

இருவரும் எஸ்.பி. ஆபீஸுக்கு வர... ஏற்கெனவே போட்டுவைத்த திட்டப்படி இருவரையும் கைது செய்தது போலீஸ். ஆடிட்டர் அமர்நாத் என்பவரின் இடத்தை அபகரித்துக்கொண்டதாக பொட்டு மீது இன்னொரு வழக்கும் பதிவானது. உடனடியாக மதுரை கலெக்டர் சகாயம், 'பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்பதால், பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில்வைக்க உத்தரவிடுகிறேன்!’ என்று ஆணை பிறப்பிக்க... வெளியில் வர முடியாதபடி சுரேஷ§க்குக் கிடுக்கிப்பிடி போடப்பட்டது.

 மதுரை குலுங்க.. குலுங்க..! 

தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர் 'அட்டாக்’ பாண்டி. மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு நேர் எதிராக இருக்கும், சுமார்  2 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்துவிட்டு, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும்கூட, அதைக் காலி செய்யாமல் ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டு வதாகத்தான் 'அட்டாக்’ மீது புகார். 

இதேபோல கல்பனா என்ற பெண்ணும், வாடகைக்கு விட்ட தன்னுடைய வீட்டை 'அட்டாக்’ பாண்டி திருப்பித் தராமல் மிரட்டுவதாகப் புகார் கொடுக்கவே, நில ஆக்கிரமிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு அமுக்கிவிட்டது போலீஸ். வீடு, கடைகளை அபகரித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான மதுரை வி.கே.குருசாமி மீதும் புகார்கள் எழுந்தன. ஏற்கெனவே சில வழக்குகள் அவர் மீது இருக்கவே, குருசாமியையும் குண்டர் தடுப்புச் சட்டத்திலேயே கைது செய்துவிட்டது போலீஸ்.

திருமங்கலத்தை சேர்ந்த சிவனான்டி என்பவர், தன்னுடைய நிலத்தை எஸ்ஸார் கோபி அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை காரை ஏற்றிக் கொலை செய்ததாக அதிரவைக்கும் வழக்கு என அடுத்தடுத்த புகார்களால் கோபியின் தலையும் உருள ஆரம்பித்தது. நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினரான கோபியை உள்ளே தள்ளிவிட்டது போலீஸ்.

 சேப்பாக்கம் டு திருப்பூர் 

உடுமலை சீனிவாசனுக்குச் சொந்தமான ஜியான் பேப்பர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியதாக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது புகார். இந்த வழக்கில் சன் டி.வி. சக்சேனா, அய்யப்பனும் சிக்க... எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அன்பழகனை எழுப்பிக் கைது செய்து, திருப்பூருக்குப் பறந்தது, போலீஸ். கண்டிஷன் பெயிலில் வெளியில் வந்த அன்பழகன், திருப்பூ ரில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.

 நகராட்சித் தலைவர்களும் உள்ளே... 

குளுகுளுப் பிரதேசமான கொடைக்கானல் நகராட்சித் தலைவராக இருப்பவர், தி.மு.க-வைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். இவர் மீதும் பண்ணை வீடு ஆக்கிரமிப்பு புகார். கொடைக்கானலில் ஜான் ரோஷன் என்பவர், 'எங்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பண்ணை வீட்டை இடிச்சிட்டு அபகரிச்சுட்டாங்க. திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபருடன் சேர்ந்து முகமது இப்ராஹிம்தான் இதைச் செய்தார்.’ எனப் புகார் கொடுக்க... அதிரடி ஆக்ஷன்தான்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சித் தலைவரான கிருஷ்ணமூர்த்தி, தனது வீட்டின் பேரில் கட்டுமானப் பணிகளுக்காக  45 லட்சம் கடன் வாங்கினார். கடனைத் திருப்பி கேட்டு வங்கியில் இருந்து பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கிருஷ்ணமூர்த்தி கண்டுகொள்ளவே இல்லையாம். கடனைக் கேட்கப் போன வங்கி அதிகாரிகளையும் கிருஷ்ணமூர்த்தி மிரட்டவே, அவர்கள் போலீஸில் புகார் கொடுக்க... அப்புறம் என்ன? ஜெயில்தான்!

 கரூரைச் சேர்ந்த மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான வாசுகியின் கணவர் முருகேசன், தம்பி ரவிக்குமார் இருவரும் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். தளவாய்பாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கிரயம் செய்துகொண்டு, பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக இவர்கள் இருவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.

திருப்பூர் அருகே முருகம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் பொங்கலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான மணி கைது செய்யப்பட்டதுதான் லேட்டஸ்ட்.

திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான குடமுருட்டி சேகர், காரில் கஞ்சா கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கம்பி எண்ணுகிறார். 

கடைகளைச் சேதப்படுத்தியது, பள்ளி மாணவன் விபத்தில் இறந்து போனதற்குக் காரணம் எனப் பல்வேறு வழக்குகள் கலைவாணன் மீது பாய்ந்து இருக்கிறது. முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், கொலை முயற்சி வழக்கில் சிக்கியிருக்கிறார். தி.மு.க. நகரச் செயலாளரை கொலை செய்யத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருக்கிறது போலீஸ்.

''இத்தோடு முடியவில்லை... இன்னும் நிறை யவே இருக்கு. பார்க்கத்தானே போறீங்க..'' என்று கண் சிமிட்டிச் சிரிக்கிறார் காவல்துறை உயரதி காரி ஒருவர். தி.மு.க.வினர் வயிற்றில் இவை புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது!

thanx - ju.vikatan 
ஆனால் நாங்க நன்றி சொல்வது சி.பி.செந்திலுக்கு....இந்த செய்தியை அவரிடமிருந்து தானே நாங்க சுட்டோம் 





Monday, August 15, 2011

ஜெயா-சசி கைது......

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

  ஆரம்பமே காப்பி பேஸ்ட்டா என்று அயர்ச்சியடையாதீர்கள்..! இன்றைய இணையத்தள வரலாற்றில் எவையெல்லாம் அவசியம் பதிந்து வைக்கப்பட வேண்டுமோ அவைகள் இன்னமும் சரிவரச் செய்யப்படவில்லை என்றே கருதுகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன்பாக ஜெயலலிதா கைது செய்யப்பட்ட தேதியை தெரிந்து கொள்வதற்காக இணையத்தில் துழாவியபோது பெரும் ஏமாற்றமே கிடைத்தது..! தமிழில் 'ஜெயலலிதா கைது', 'கைது செய்யப்பட்டார்' என்றெல்லாம்  வேறு விதமாகவெல்லாம் தட்டச்சு செய்தும் கூகிளாண்டார் உண்மைத் தேதியை கண்ணில் காட்டவில்லை.

ஆனால் ஆங்கிலத்தில் 'Jayalalitha Arrested' என்று தட்டச்சு செய்தவுடன் வந்து கொட்டியது தகவல்கள்...! ஆங்கில பத்திரிகைககள்கூட பல தகவல்களை இணையத்தில் சேகரித்து வைத்திருக்கும்போது தமிழ்ப் பத்திரிகைகள் ஏன் இப்படி கஞ்சத்தனம் செய்கின்றன என்று தெரியவில்லை..!

நல்லவேளையாக சென்ற 4 இதழ்களுக்கு முன்பாக ஜூனியர்விகடனில் ஜெயலலிதா கைது பற்றிய பழைய செய்தியை, மீண்டும் பதிவு செய்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்கள். வாழ்க விகடனார்கள்..!

இந்தச் செய்தியைப் பதிவு செய்வதற்காகவும் கூடுதலாக சில தகவல்களைச் சொல்வதற்காகவுமே இந்தப் பதிவு..!

இனி ஜூனியர்விகடன்

தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்​பட்ட முதல் - முன்னாள் முதல்வர் இவர்தான்!

தான் கைது ஆவதைத் தடுத்து நிறுத்த, ஏழு விதமான முன் ஜாமீன் மனுக்களை அவர் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்​தார். அவை நிராகரிக்கப்பட்ட மறு நாள், 1996 டிசம்பர் 7-ம் தேதி சனிக்கிழமை காலை 8.05 மணிக்கு, போயஸ் தோட்டத்தில் அவரைக் கைது செய்ய போலீஸ் நுழைந்தது. டி.ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் தலைமையில் எட்டு போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அது.

அங்கே பி.ஹெச்.பாண்டியன் இருந்தார். கைது செய்வதற்கான சம்மன் அவரிடம் போலீஸாரால் தரப்பட்டது. பஞ்சாயத்து யூனியன்களுக்கு கலர் டி.வி-க்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்படுகிறார் என்பதை அறிந்தவுடன் பி.ஹெச்.பாண்டியன், போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார். ''முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்கிறோம்... அதற்குள் கைது செய்வதா?'' என்று அவர் எதிர்த்ததை, போலீஸ் ஏற்கவில்லை. காலை 9.05-க்கு ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

போயஸ் தோட்ட வாசலில் ஏராளமான நிருபர்கள் அதிகாலையில் இருந்து காத்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு. ''அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை இது!'' என்று நிருபர்களிடம் ஜெயலலிதா சொன்னபோது, அவர் கண்களில் நீர் திரையிட்டது. அப்போது அவர் மிகவும் சோகத்துடன் காணப்​பட்டார்.

போலீஸ் வண்டியான டயோட்டா வேனில், காலை 9.10 மணிக்கு கமிஷனர் ஆபீஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு - உளவுப் பிரிவு டெபுடி கமிஷனர் அறையில் அமரவைக்கப்பட்டார். பிறகு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி ராமமூர்த்தி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டபோது, மணி 11.05. அவரை டிசம்பர் 21-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் என்கிற அளவில் சுலோசனா சம்பத் மட்டுமே தென்பட்டார். ஜெயலலிதா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது நேரம்... காலை 11.45.

சிறைச்சாலை வாசலில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெருவாரியாகக் குழுமி இருந்தனர். அவர்களைப் பார்த்த ஜெயலலிதா உணர்ச்சிவயப்பட்டு, ''தி.மு.க. ஆட்சியின் இந்த அராஜகத்தைப்பற்றி மக்களிடம் போய் விளக்கிச் சொல்லுங்கள்...'' என்று பேசினார்.

ஆங்காங்கே தாங்கள் பார்த்த காட்சிகளை இதோ நிருபர்கள் தருகிறார்கள்...

ஜெயலலிதாவைக் கைது செய்யப் போவது எந்த போலீஸ், எந்த வழக்கில் என்பது பற்றி ஒரு போட்டியே இருந்தது. சி.பி.ஐ. 'நாங்கள்தான் கைது செய்யப் போகிறோம்’ என்று சொன்னது. கடைசியில் மாநிலக் குற்றப் புலனாய்வு போலீஸ் கைது செய்தது. கைது செய்தவர் - இதன் டி.ஐ.ஜி-யான ராதாகிருஷ்ணன். ஒரு விசேஷம் என்னவென்றால், இதே ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். காலத்தில் ஒரு வழக்கில் கலைஞரையும் கைது செய்தவர்!

ஜெயலலிதாவின் தலைமுடி மிகவும் நரைத்து இருந்தது. காபி கலரில், பூப்போட்ட புடவையும் அதே கலர் கோட்டும் அணிந்து இருந்தார். போலீஸ் தன்னை மறுநாள் கைது செய்யப் போகும் தகவல் வெள்ளி இரவு 11 மணிக்கே ஜெயலலிதாவுக்குத் தெரியும். காலையில் 5 மணிக்கே எழுந்து, குளித்துத் தயாராகக் காத்திருந்தார். அதிகாரிகள் வரும்வரையில் பூஜை செய்து இருக்கிறார். 'பூஜை முடியட்டும்’ என்று போலீஸார் சிறிது நேரம் காத்திருந்தனர். பிறகு வந்த ஜெயலலிதாவிடம் அதிகாரிகள் அவரைக் கைது செய்யப் போவதாகத் தெரிவித்தனர். எந்த வழக்கில் என்று கேட்டுத் தெரிந்து கொண்டவர், 'பத்து நிமிடங்கள் பொறுங்கள்’ என்று உள்ளே சென்று, தான் அணிந்திருந்த வைரக் கம்மல் உட்பட நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு வந்தார். வரும்போது வெறும் ஜூஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தாராம்.

ஜெயலலிதாவை போலீஸ் வேனில் ஏற்றியபோது, சமையல்காரி ராஜம்மாள் கதறி அழுதார். ராஜம்மாளை போயஸ் தோட்டத்தில் வேலைக்குச் சேர்த்தவர், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்!

ஜெயலலிதா போலீஸ் வண்டியில் ஏறிய​போது, தோட்டத்தில் இருந்த அத்தனை நாய்களும் பயங்கரமாகக் கத்தித் தீர்த்தன!

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்​தவுடன், ஜெயலலிதா சுதாரித்துக்​கொண்டு​விட்டார். புகைப்படக்காரர்களைப் பார்த்து முகத்தில் புன்னகை தவழவிட்டார். போலீஸ் டி.எஸ்.பி-யான சென்ராய பெருமாள் விசாரணை நடத்தினார்.

போலீஸ் கமிஷனர் ஆபீஸில் இருந்து ஜெயலலிதா அழைத்து வரப்பட்டபோது, நிருபர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னே வர - ஒரே கூச்சல், குழப்பம். ஒரு தனியார் டி.வி-யின் பெண் நிருபர் தடுமாறிக் கீழே விழ, 'தடதட’வென மற்ற நிருபர்களும் சரிந்து விழுந்தனர். அதைப் பார்த்த ஜெயலலிதா பதறிப்போய், அந்தப் பெண் நிருபரைத் தூக்கிவிட்டு, 'என்ன? அடி எதுவும் பட்டதா?’ என்று டென்ஷனுடன் விசாரித்துவிட்டு நகர்ந்தார்.

ஜெயலலிதா கைது படலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் வி.ஐ.பி. மரியாதை கொடுத்து போலீஸ் அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்கள் - சன் டிவி-க்காரர்கள்!
நீதிபதி வீட்டில்...

மிகச் சரியாக 11.05-க்குக் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள 'டவர் பிளாக்’ முன்பு ஜெயலலிதாவைக் கொண்டு வந்து இறக்கினார்கள் போலீஸார். எல்லோரும் இறங்கிய பின் இரண்டு மூன்று பெண் போலீஸ் புடைசூழ வேனைவிட்டு இறங்கினார் ஜெயலலிதா.

ஐந்தாறு நபர்களை மட்டும் ஜெயலலிதா உடன் செல்ல அனுமதித்தனர்.

கொஞ்ச நேரத்தில் கறுப்பு கவுன் சகிதம் பி.ஹெச்.பாண்டியன் வர, அவரை நீதிபதி வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். அவர் பின்னாலேயே சஃபாரியில் வந்த ஜீனசேனன், ''என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க? ரூல்ஸ் தெரியாதவன்கிட்ட உங்க வேலையைக் காட்டுங்க!'' என்று டென்ஷனுடன் கத்த... அவரையும் உள்ளே அனுப்பியது போலீஸ்.

நீதிபதி ராமமூர்த்தி முன்பு, ஜெயலலிதா சிலையாக நின்று இருந்தார். நீதிபதி சோபாவில் அமர்ந்திருந்தார். பி.ஹெச்.பாண்டியன்தான் வாதிட்டார். ஜெயலலிதா அவரிடம் சில பாயின்ட்டுகளை எடுத்துத் தந்தார். ''டி.வி. வாங்கியது முறையாக நடந்த ஒன்று. கேபினெட் கூட்ட முடிவுதான் அது. இந்தக் கைது, அரசியல் நோக்கம் உடையது!'' என்றார் பாண்டியன். ''அரசியல் பற்றி இங்கே பேச வேண்டாம். வழக்கு பற்றி பேசலாம்...'' என்றார் நீதிபதி. ஜெயலலிதா, 'ஊழல் எதுவும் நடக்கவில்லை’ என்று விளக்கினார். 'ஜெயிலில் தனக்குத் தகுந்த பாதுகாப்பு வேண்டும்’ என்றார் ஜெயலலிதா. 'அதற்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்றார் நீதிபதி!

ஏறத்தாழ 35 நிமிடங்கள் கழிந்த பின், எட்டாவது மாடியில் உள்ள நீதிபதி ராமமூர்த்​தியின் வீட்டில் இருந்து லிஃப்ட் மூலம் ஜெயலலிதாவைக் கீழே இறக்கிக் கொண்டு வந்து, போலீஸ் வேனுக்குள் ஏற்றினார்கள்.

கிராமங்களுக்கு 45,000 கலர் டி.வி. வாங்கியதில் எட்டரைக் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டுள்ளார் (இது பற்றி ஜூ.வி. 14.8.96 இதழில் முன்பே செய்தி வந்துள்ளது).

இந்த டி.வி-க்கள் முறையாக வாங்கப்படவில்லை​யாம். அப்போதைய நிதித் துறைச் செயலாளர் ஆட்சேபனை தெரிவித்திருந்தும், முதல்வராக இருந்த ஜெயலலிதா வலுக்கட்டாயமாக வாங்க உத்தரவு போட்டார் என்று குற்றச்சாட்டு.

டெய்ல் பீஸ்...

ஜெயலலிதாவைக் கைது செய்வது பற்றி தமிழக அரசு முதலில் எந்த முடிவுக்கும் வரவில்லை. கைது திடீரென்று நடந்தது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் ஆகியோரைத் திரும்பத் திரும்பத் தாக்கி ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, உடனே கைது செய்யக் காரணமாயிற்று என்கிறார்கள். இந்தக் கைது படலத்துக்குப் பிறகு போயஸ் கார்டனில் இரவுவரை ரெய்டும் நடந்தது.

- ஜூ.வி. நிருபர்கள்

சசிகலாவுக்கு வலிப்பு!      11.12.1996

ஜெ.ஜெ. டி.வி. மூலம் சசிகலா, அந்நியச் செலாவணி மோசடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயிலில் இருந்த அவரிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது, ரத்த அழுத்தமும் வலிப்பும் வந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சசிகலா. இதன் பிறகு, புதியதொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட, கடந்த 3-ம் தேதியன்று ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கோர்ட்டுக்கும் கொண்டுவரப்பட்டார்.

ஆனால், சசிகலாவின் உடல்நலக் கோளாறை, 'ஒரு புரியாத புதிர்’ என்றே வர்ணிக்கிறார்கள் டாக்டர்களும் மற்ற மருத்துவ ஊழியர்களும்!

அரசு பொது மருத்துவமனையில் உள்ள 'இன்டென்ஸிவ் கேர்’ யூனிட்டில் சசிகலா அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு இருந்த இந்த அறையில் சசிகலாவின் படுக்கை தனியாகவே இருந்தது. சசிகலாவுக்கு அருகில் பெண் வார்டன்கள் நான்கு பேர் நிறுத்தப்பட்டு இருந்தனர், வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள்! இவர்களுக்கிடையே சசிகலாவின் உறவினர்கள் ஏராளமான பேர் மருத்துவமனையில் வலம் வந்தபடி இருந்தனர். பெரும்பாலானோர் கைகளில் செல்​போன்!

சசிகலாவுக்காகவே ஐந்து ஹவுஸ் சர்ஜன்கள் தயாராக இருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சசிகலாவுக்குப் பரிசோதனை நடந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று ஓரளவு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. அதற்கான மருந்தைக் கொடுத்தவுடன் சசிகலா குணமாகி​விட்டார். ஆனால், அதன் பிறகு உணவு அருந்த மறுப்பதும், உட்காராமல் பிடிவாதம் செய்வதுமாக இருந்துள்ளார்.

அதனால் வேறு வழி இன்றி அவருக்கு குளு​கோஸ் ஏற்றியுள்ளனர். இருப்பினும், அவ்வப்​போது சசிகலாவுக்குக் கை - கால்கள் இழுத்தபடி இருக்க... அதற்கான காரணத்தைத் தேடினார்கள்.

முதலில் ரத்தப் பரிசோதனைகள். அதில் எதுவும் பிடிபட​வில்லை என்று தெரிந்ததும், 'மூளையில் ஏதாவது பிரச்னை இருந்தால்தான், இப்படி வரும்’ என்று நினைத்து, இ.இ.ஜி பரி​சோதனை செய்யப்பட்டது. அதிலும், 'எந்தக் கோளாறும் இல்லை’ என்று தெரியவந்தது.

சி.டி. ஸ்கேன் மூலம் 'மூளையில் ரத்தக் கட்டி இருக்குமா...?’ என்றும் சோதனை செய்ய... 'அப்படி எந்தக் கட்டியும் இல்லை’ எனத் தெரிந்தது. மனநல ரீதியாக உடல் பாதித்து இருந்தால், அதையும் கண்டறிய முடியும். ஆனால், அந்தச் சோதனை செய்யப் பொது மருத்துவமனையில் வசதி இல்லை. இதனால் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, எம்.ஆர்.ஐ. சோதனை செய்து பார்த்தனர். பிறகு, 'உடலில் ஏதாவது ரசாயன மாற்றம் ஏற்பட்டு இருக்குமோ..?’ என்று ‘Knee Hammer’ என்ற பரிசோதனையையும் செய்தனர். பிறகு இதயம், லிவர், கிட்னியைப் பரிசோதனை செய்ய, எல்லாமே நன்றாகவே இருந்துள்ளன!

இப்படி எல்லாமே சரியாக இருக்க, சசிகலாவுக்கு வலிப்பு வந்தது எப்படி என்று டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். மற்றொரு சோதனைதான் ஹைலைட். நோயாளியின் கால் பாதத்தில் 'ரிஸீமீமீ பிணீனீனீமீக்ஷீ’ என்ற கருவியைக் கொண்டு இழுக்கும்போது, காலின் பெருவிரல் விறைத்து நீட்டிக்கொண்டால், நோயாளிக்கு மூளையின் பாதிப்பால் வலிப்பு நோய் வந்து இருக்கிறது என்று அர்த்தமாம். ஆனால், இ.இ..ஜி. மூலம் மூளையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெளிவான பிறகு, இந்தச் சோதனையின்போது மட்டும் சசிகலாவின் கால் பெருவிரலில் விறைப்பு ஏற்பட்டது கண்டு டாக்டர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

'ஏன் இப்படி இருக்கிறது? முரண்பட்ட வலிப்பு நோயாக இருக்கிறதே என்று டாக்டர்கள் மத்தியில் பேச்சு! இருந்தாலும், 'ஹார்லிக்ஸ் வேண்டுமா..? போர்ன்விட்டா வேண்டுமா..?’ என்று சசிகலாவுக்கு கொடுத்த உபசரணைகள், ஜெயலலிதாவின் ஆட்சிதான் வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது!

சென்னை மனநல மருத்துவமனை டாக்டர்கள் பாஷ்யம் உட்பட நான்கு பேர் வந்து சசிகலாவை பார்த்தனர் அப்போது சசிகலா தனக்கு 12 வயதிலும் பிறகு 18 மாதங்​களுக்கு முன்பும் இதே போன்று வலிப்பு வந்ததாகக் கூறியுள்ளார். பிறகு உயர் மட்ட கமிட்டி முடிவின்படி, கடந்த 5-ம் தேதி மாலை 4 மணிக்கு மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டார் சசிகலா.

- கண்பத்

நன்றி : ஜூனியர்விகடன்
இந்த பதிவு உண்மைத்தமிழன் அண்ணாச்சியிடமிருந்து சுட்டது.ஆகவே, அவருக்கு எங்களின் ஸ்பெஷல் நன்றி.







சுடச்சுட ஒரு அறிமுகம்....


ல்லோருக்கும் வணக்கம்...வந்தனம்..... நமஸ்தே.....இன்னைக்கு ஆகஸ்ட் 15. நம்ம நாட்டுக்கு சுதந்திர நாள். இன்னைக்கு நம்ம வலையுலகில் ஒரு புதிய அத்தியாயமாக ஒரு வலைப்பதிவை துவங்குகிறோம்.

இதற்கு சுட்டதில் சுட்டது என்ற தலைப்பு வைத்துள்ளோம். காரணம், இப்பொதெல்லாம் திருடுவது(சுடுவது) சர்வ சாதாரணமாக செய்யப்படுகிறது. உலக சினிமாக்கள் எல்லாம் சுடப்பட்டு தமிழ்படமாக வருகிறது. பிற விஷயமுள்ள பதிவர்களால் வலையேற்றப்படும் விஷயங்களெல்லாம் மேல்மாடி(மூளை) காலியான, கிரியேட்டிவிட்டி இல்லாத பதிவர்களால் சுடப்பட்டு அவரவர் பெயர்களில் வலம் வருகிறது. பிரபல பத்திரிகைகளின் செய்திகளெல்லாம்  ஹிட்ஸுக்காக சுடப்பட்டு பிரபலமாகிறது.

அப்படி சுடுபவர்களின் பதிவையே சுடச்சுட சுட்டு உங்களுக்கு ஒரு கதம்பமாய் தருவதுதான் எங்களின் நோக்கம். அதாவது கஷ்டப்பட்டு வடை சுட்ட பாட்டியின் வடையை காக்கா தூக்கிட்டு வந்து அதை நரியிடம்  பறிகொடுக்கும் கதை போல....இனி வரும் காலங்களில் சுட்டு தரப்போகும் செய்திகளால்....இனி ஒரு வாசகர் கூட ஆ.வி., ஜூ.வி., குமுதம், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளுக்கு சந்தா கட்ட வேண்டியதில்லை என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.

ஆனாலும், நாங்கள் எந்தப்பத்திரிகை செய்தியையும் சுடமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். அட....யாருங்க தேவையில்லாமல் அந்த பத்திரிக்கையை வாங்கி படித்து, பின் அந்த செய்தியை கை வலிக்க, விரல் கடுக்க டைப் பன்னுவது? அதனால்தான்  அப்படி அந்த செய்தியை, வெளி நாட்டில் இண்டெர்னெட் கனெக்சனுக்கு டாலர்களில் சந்தாகட்டிவிட்டு, பத்திரிகை வாங்கி படிக்க பணமில்லாமல் தடுமாறும் நண்பர்களுக்காக சுட்டுப்போட்டுக்கொண்டிருக்கும்  பதிவர்களிடமிருந்தே பதிவை சுடப்போகிறோம்.


அதே நேரம், வலைப்பதிவு தர்மத்தையும்  மீறப்போவதில்லை....ஆமாங்க... நாங்கள் யாரிடமிருந்து ஒரு பதிவை சுடுகிறோமோ அவர்களின் பெயரை போட்டு நன்றி தெரிவித்து விடுவோம்....சுட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.....ரைட்டு வரட்டா.....மீண்டும் சந்திப்போம்